Wednesday 14 August 2013

காத்திருந்த காதல்

அந்தி சாயும் நேரமடி..
ஆள் அரவம் இல்லையடி..
உன் வரவை எண்ணி எண்ணி
உயிர் கொஞ்சம் நோகுதடி..
என் தனிமை நீ அறிய
வெண்ணிலாவும் தேடுதடி...
வீதியிலே நீ இருந்தா
சேதி உன்ன சேருமடி..
காத்திருக்க கஷ்டமில்ல
காதலோட நீ கூட வந்தா.....!

   
                                                                         - ரா. கார்த்திக்

Friday 2 August 2013

நான் விரும்புவதெலாம்

நித்தம் உன்
நினைவு கண்டு
என் சித்தம் எங்கும்
இரத்தம் சிந்துதடி.

நான் விரும்புவதெலாம்...
உன்னிடத்தில்
எனக்கான
ஓர் இடம்
என்னில் முதலாய் நீ..
உன்னில் முடிவாய் நான்.

நான் விரும்புவதெலாம்...
என் கவிதைகளுக்கெலாம்
கருவறையாய்
உன் இதயம்
உன் கனவுகளில் கூட
உனக்கான
காதலனாய் நான்..

நீ வாத்தியக்கருவியானால்
நான் கூட இசைக்கலைஞன் தான்
உன்னை மீட்டும் போது.
மங்கையர் நூலகத்தில்
நான் கண்டெடுத்த
புத்தகம் நீ..!
உன்னை முழுவதுமாய்
படிக்க ஓர்நாள் ஆசை...

நான் விரும்புவதெலாம்...
உன்னில் பாதியல்ல
முழுவதுமாய்
வாழ ஆசை...
உன் ஆடை மீது
எனக்கு கோபம்...
உன் பிரபஞ்ச அங்கத்தில்
எனக்கோர் பிறவி வேண்டும்.
தலை முடி முதல்
பாத அடி வரை
உன் விருப்பம்.

நான் விரும்புவதெலாம்...
உன் மேனி எங்கும்
என் முத்த
அடையாளங்கள்..
கைபடா இடங்களிலெலாம்
என் கையெழுத்து...
கச்சேரி முடிந்ததும்
உன் காதோரம்
என் கவிதை...!

நான் விரும்புவதெலாம்...
நம் இருவருக்குமிடையில்
இடையூறு ஏதேனும்
வராத நேரம்
இடைவேளை ஏதும்
தராத நேரம்.
விடியும் வரை உன் வாசம்
விடிந்தபின் உன் சுவாசம்

காலை நேர காபியாய்
உன் முத்தம்
தினம் ஓர் சுவை அது
தித்திக்கும் அறுசுவை..!
மல்லிகைப்பூ கைகளில்
வெள்ளைப்பூ இட்லி
தொட்டுக் கொள்ள
எதுவும் வேண்டாம்
கட்டிக் கொள்ள
உன் கைகள் போதும்..!
விக்கல் வந்தால்
உன் விரலில்
தண்ணீர் குடிப்பேன்
சிக்கல் வந்தால்
உன் மடியில்
கண்ணீர் வடிப்பேன்..!

முடிவாக,
நான் விரும்புவதெலாம்...
காலந்தோறும் உன் காதல்
கடைசி வரை உன் தேடல்
மோகம் தீர்ந்த வேளையிலும்
முத்தமிட உன் உதடு...
நரை விழுந்த வேளையிலும்
நான் விரும்பும் காதலியாய் நீ..!



                                                         -தமிழ்ஹாசன்

கனாக்கண்டேன் தோழி


மொட்டைமாடி நள்ளிரவில்
யாருமில்லா வேளையில்
முற்றத்து நிலாவுடன்
நீயும் நானும் மட்டும்.

கும்மிருட்டில்
குட்டைப் பாவாடையும்
சட்டைப் பையனுமாய் நீ..!

நடு இரவில்
நித்திரை கலைந்து
நிராயுதபாணியாய்
நிற்கும் நான்.

இரவில் கூட
பகலாய் இருக்கிறாய்
கொஞ்சம் நிலவுக்கு
உன் அழகை
இரவல் கொடு
பகலிலும் வந்து போகட்டும்..!

இரவு முடியும் வேளையில்
விடியலைப் பற்றி
விவாதித்துக் கொண்டோம்

நிலவு மறையும் நேரம்
நித்திரைக் கனவை
பகிர்ந்து கொண்டோம்

மன அமைதி என்றுரைத்து
மக்கள் அமைதி
வேண்டிக் கொண்டோம்

விடியலைத் தேடும்
பாதையில் நம்
காலடித்தடங்கள்.

என் கரம்பிடித்து
நடைபயிலும் ஓர்
கைக்குழந்தையாய் நீ..!

விரல் பிடித்த நேரம்
விண்ணில் நடப்பது போன்ற
உணர்வு என்னுள்.
உண்மைதான்
நீ என் வசமிருந்தால்
வானம் கூட நான்
தொட்டு விடும் தூரம்தான்...

நடந்து நடந்து
மூலையில் முடங்கிக் கொண்டாய்
முடியாதென்று கூறி
மூச்சிரைத்தாய்.
மீண்டும் நடக்கத்
தயாரானோம்
என் இரு கால்களில்..!

ஒற்றை நிழல்
நிழலில் நான்
என்னில் நீ...
பூவும் பெண்ணும்
ஒன்றென்பதை
உணர்ந்தேன்
பெண் ஒருபோதும்
பாரமில்லையென்பதை
உன்னால் அறிந்தேன்

என் இரு கரங்களில்
காகிதப் பூவாய் நீ...!
இரவைக் கடந்தும்
நடந்து கொண்டிருந்தோம்
எங்கோ விடியப் போகிற
விடியலைத் தேடி.
விடியலும் வந்தது
என் இதயத்தின்
இடப்பக்கத்தில்
இனம் புரியாத
வலியும் வந்தது.

நினைவில் நீ
நின்றதைக் கண்டு
மஞ்சம் செழித்தது
நிஜத்தில் நீ
இல்லையென்று
நெஞ்சம் வலித்தது.
எங்கோ இருக்கிறாய்
என்றும் மாறாத
அதே அன்புடன்
இன்றும் என்னுள்
அன்று பார்த்த அதே
அன்புத் தோழியாய்..!



                                            -தமிழ்ஹாசன்

நிர்வாண உண்மை

ஓர் அதிகாலை கனவிது
அந்த ஓர் அமைதியான
அலாரமில்லா வேளையில்
அவளது அருகில் நான்..
அவள் பக்கத்தில் நானும்
என் கக்கத்தில் அவளுமாய்
கட்டிலில் கட்டியிருந்த நேரம்...
கண்கள் இரண்டும்
கனவினைத் தேட
கைகள் இரண்டும்
காமனை நாட
கட்டியணைத்த நேரம்
கண்களில் கண்ணீர்த்துளி
கண்ட ஒவ்வோர் துளியிலும்
கண்மணி உனது விழி...!
உன் முதுகுத்தண்டில்
முகம் புதைத்தேன்
' ம் ' என்றாய்...
மூச்சுவிட முடியாமல்
முத்தம் தந்தேன்
' ம்ஹூம் ' என்றாய்...
இன்னும் சொல்லாத
இடங்களிலெலாம்
பல்லால் கடித்தேன்
' ச்சீ ' என்றாய்...
முடிக்கும் வேளையில்
முத்தம் தந்தேன்
போதும் என்றாய்...
முடியாது இனிமேல் என்று
காதலை சொன்னேன்
போதாது என்றாய்...
விடியலைத் தேடும் உலகில்
உன் விழிகளைத் தேடும்
என் விழிகள்
உன் கைகைளைத் தேடும்
என் கைகள்
உன் மார்பினைத் தேடும்
என் தலை
உன் தேகத்தை தேடும்
என் மூச்சுகாற்று
போதவில்லை நமக்கு
இருந்தாலும்
போதுமடி எனக்கு..!
கட்டியணைத்த நேரம்
கனவாக போனாலும்
கண்களில் சிந்திய
கண்ணீர் மட்டும்
கைகளில்  நிக்குதடி ...!
விடிந்ததும் புரிந்தது
நிஜத்தில் நீ இல்லாத
நேரம் கண்டு
நித்திரை கலைந்தேன்...
என் நிர்வாணத்தை
உணர்ந்தேன்.. !


                                                           - தமிழ்ஹாசன்

ஒரு துளி மழை

அதிகாலை
அமைதியான நேரம்
அவனின் அரவணைப்பில் அவள்

அலாரம்
அபாயச்சங்காய் அலறியது
சிதறிய ஆடைகளைச்
சேர்த்தெடுத்தாள்
விடியலை அன்றுதான்
விசாலப் பார்வையாய் பார்த்தாள்.

கணவன் கண்விழிக்கும் நேரம்
கதிரவன் காலைவணக்கம் சொன்னான்
மனைவியை மஹாலக்ஷ்மியாய்
அன்றுதான் பார்த்தான்
இருவருக்கும் புன்னகை
மட்டுமே பொது மொழியானது

நாட்களை எண்ணிக்கொண்டே
இருந்தான் நாணத்துடன்
அந்த நாளை குறிப்பிட்டு
அவளிடம் கேட்டான்
இருபுறமும் தலையசைத்தாள்
இல்லை என்றவாறு.

சில நாட்களாய்  அவனும்
இதே கேள்வி
அவளும் இதே பதில்..

உண்மை ஊர்ஜிதமாகும்
எண்ணத்தில் அவர்கள்
அவளிடம் அம்மா
' ஜாக்கிரதையாக இரு "
  என்றாள்.

அப்பா,
"உடம்பை பாத்துக்கோ "
என்றார்.

கணவன்,
"எந்த வேலையும் செய்யாதே "
என்றான்.

அத்தை,
"முடிவாக மூன்றாம்நாள் பாப்போம் "
என்றாள்.

இறுதியில் உறுதியாக்கும் முயற்சியில்
' மருத்துவமனை  செல்வோம் '
என்றான் கணவன்.
மூவாயிரம் மூட்டைகளில்
மகிழ்ச்சியை மொத்தமாய்
கட்டியதுபோல் மனதினில்
வைத்துகொண்டாள்.
குளித்துவிட்டு வருகிறேன்
என்றவள் வந்தவுடன்
அழத்தொடங்கினாள்
என்னாயிற்று
என்றான் கணவன்
தேம்பித் தேம்பி
அழுதவாறே சொன்னாள்
" தேகத்தில் இருந்து
மழை வந்துவிட்டதென்று..! "


                                                        -தமிழ்ஹாசன்

பாரதி

பாரதி,
அன்று உன்னை மட்டுமா
கிறுக்கன் என்றார்கள்?
இன்று என்னையும்
அல்லவா சொல்கிறார்கள்
உன் கவியைப் பற்றி
பாடும்பொழுதெல்லாம்..!

                                                  - தமிழ்ஹாசன்.
*



Monday 18 February 2013

வாசனை


                               
               ஒவ்வொரு நாளும் காலை துயில் எழுவதில் இருந்து இரவு துயில் கொள்ளும் வரை வித விதமான வாசனைகளை நுகர்ந்து கொண்டிருக்கின்றேன். எதை தேடுகிறது என் நாசி..? எங்கிருந்து வருகிறது வாசம்..? அம்மாவின் வியர்வை வாசம், அப்பாவின் மருந்து வாசம் மட்டும் பழக்கப்பட்டு போன எனக்கு எல்லா வாசனைகளும் புதியதாகவே இருந்தன. தினந்தோறும் சாலையோரம் செல்கையில் வாகனப் புகை தந்துவிட்டு போகிற ஒரு வாசம்.. வார நாளிதழ்கள், தினசரி நாளிதழ்கள், புத்தகங்கள் என எது வாங்கினும் நான் படிக்கும் முதல் செய்தி அதன் வாசனையை மட்டுமே. எங்கிருந்தோ அந்த புத்தம் புது தாள்களில் வருகிற வாசனை என்னை வேறொரு உலகிற்கு கொண்டு செல்வதாய் நான் உணர்கிறேன். என் படிக்கும் ஆர்வத்தினை விட அது தரும் வாசனையே என்னை ஒவ்வொரு நாளும் படிக்க தூண்டுகிறது. இரவு நேர உணவு வாங்கி வரும் வேளையில் ஒரு முட்டுச் சந்தினைப் போல் உள்ள தெருவினில் நடந்து வரும் போது அந்த வீடுகள் தருகிற ஈர வாசனை... என்னை காலத்தின் முன்னோக்கி செல்ல வைக்கிறது. என் குழந்தைப் பருவத்தை வளர்த்த எங்கள் குடும்ப நண்பர்களாக இருந்த ' ஆசசி வீடு ' தருகிற வாசனை அது. எந்நேரமும் வீட்டினுள் ஓர் ஈர வாசனையை நுகர்ந்து கொண்டே இருக்க முடியும். அந்த மரத்தாலான மாடி படிக்கட்டுகளில் அதன் ஓரங்களில் ஈரமும் சேர்ந்து தருகிற வாசனை ஆயுசுக்கும் நாசியை விட்டு அகலாது. போதாதென்று அந்த வீட்டின் அக்காக்கள் தருகிற வாசனை புதிது. தீப்பெட்டி தொழிற்சாலையின் தீப்பெட்டிகளில் ஒட்டுகிற கோந்தும் அதனுடன் எந்த சாயமும் முகத்தில் பூசிக்கொள்ளாத தேகத்தின் இயற்கை வாசமும்  கலந்து தருகிற ஒரு பரிசுத்தமான  வாசனை அது. இது தான் பெண் வாசனை என அப்போது நினைத்திருந்தேன். அது ஏழ்மையின் வாசனை என்பதை நான் அப்போது உணரவில்லை. காலங்கள் மாற பாதைகள் மாற ஒவ்வொரு வாசனையும் எனக்கு புதியதாகவே இருந்து வந்தது. மல்லிகைப் பூ பெண்களுக்கென்றே ஒரு வாசம், மாதா கோயில் பெண்களுக்கென்றே ஒரு வாசம், கடைக்கார பெண்மணிகளுக்கென்று ஒரு வாசம், கம்ப்யூட்டர் பெண்மணிகளுக்கென்று ஒரு வாசம் என்பதை நான் உணர்ந்து வந்தேன். ஒவ்வொரு பெண்ணும் தரும் சுகத்தினை விட அவள் தரும் வாசனை சுகம் சுகமானது என்றே நான் எண்ணுகிறேன். இது போதாதென்று சுய இன்ப வேளைகளில் என் ஆண்மை சிந்தும் விந்துவின் வாசம் புது புது அர்த்தங்களை என்னுள் தருகிறது. ஐன்ஸ்டீன் க்கு அழுகிய ஆப்பிள் வாசம் தான் புத்துணர்ச்சியை தருமாம். ஹிட்லர் க்கு இரத்த வாசம். அது போலவே எனக்கும் பல பல வாசனைகள் புத்துணர்ச்சியை தருகிறது. சிகரெட் புகை தருகிற வாசனை, மது அருந்தும் பொழுது பிளாஸ்டிக் தம்ளரின் வாசனையும் மதுவும் சேர்ந்து தருகிற வாசனை, சிநேகிதியின் எச்சில் முத்த வாசனை எல்லாமும் சேர்ந்து எனக்குள் ஒரு வித மயக்கத்தை தருகிறது. மயக்கத்தின் முடிவிலே என் படைப்பு பிறக்கிறது. எப்போது என்னுள் மரண வாடை அடிக்கிறதோ அப்போது  நான் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம் அதுவரை என்னைச் சுற்றிய எல்லா நிகழ்வுகளிலும் என் வாசனை வாழ்ந்து கொண்டே இருக்கும்.  !            



        

                                                                                                         -  தமிழ்ஹாசன்