Friday 25 January 2013

இவள் என் காதலி...


                         இதோ என் காதலி.. இவளே என் காதலி... இவளை நான் மனைவி என்று சொல்ல மாட்டேன் மனைவி என்ற மடத்தனமான வார்த்தையில் எனக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை. மாறாக, அதற்கு எல்லா தகுதியும் உடையவளாகவே இவள் இருக்கிறாள். என் வாழ்நாளில் இவளுக்கு ஒருபோதும் நான் பணிவிடைகள் செய்ததில்லை. ஓர்நாளும் எனக்கு பணிவிடைகள் செய்யாமல் இவள் இருந்ததில்லை. என் குருட்டு உலகின் கதவினை திறந்துவிட்டு எனக்கான பாதையை காட்டியவள் இவள் தான். இவள் இன்றி ஓர் அணுவும் எனக்கு அசையாது. என் எண்ணங்கள் இவள் மூலமே வலுவடைந்தன. என் கற்பனைகள் இவள் மூலமே உயிர் பிறந்தன. என் வாழ்க்கை முழுதும் தரையை தடவி செல்லும் சேலை முந்தானையைப்  போல அவள் பின்னே சென்றன. அவள் ஓர் நிலைக் கண்ணாடி. என் எண்ணங்கள் யாவையும் அவள் கண்களின் மூலமே நான் தினந்தோறும் காண்கின்றேன். மற்றவர்கள் வாழ்ந்திடும் சராசரி வாழ்கையை நாங்கள் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. என் ஆசைகளுக்கு குருக்கீடாய் அவள் ஒருபோதும் தடையாய் இருந்ததில்லை. விடை தெரியா என் செய்கைகளுக்கு ஒருபோதும் அவள் கேள்வியை பதிலாய் கேட்டதில்லை. ஒரு நடமாடும் எந்திரமாகவே என்னுடன் இத்தனை ஆண்டுகள் இருந்து வந்தாள். இருப்பினும் அவள் சுதந்திரத்தை ஒருநாளும் நான் பறித்ததில்லை. ஒவ்வொரு முறை உடல் உரசும் போதும் என் உதவாத ஆண் குறி கண்டு அவள் ஒருநாளும் வருத்தப்பட்டதில்லை மாறாக, நான் தர வேண்டிய எல்லா சுகத்தினையும் அவளே ஒட்டுமொத்தமாக எனக்கு தந்தாள். நான் ஒரு படைப்பாளன், எழுத்தாளன் என்பதை எப்போதும் தலை நிமிர்ந்து கர்வமுடன் சொல்வேன். ஆனால், நான் ஒரு ஆண் என்று சொல்லும் போது மட்டும் என் குறியினை போலவே என் தலையும் தொங்கிப் போய் விடுகின்றன அந்நேரங்களில்... அதைக் கூட அவள் பெரிதாய் எடுத்துக் கொண்டதில்லை. காரணம் என்னை போலவே குழந்தை பெற்றலையும் அவள் பெரிதாய் விரும்பியதில்லை. நான் ஒருபோதும் அவள் உடல் அறிந்து மனம் அறிந்து அவளுக்கான தேவையை செய்ததில்லை.. ஆனால் , எனக்கான தேவை என்ன என்பதை என்னை விட அவளே நன்கு அறிவாள். என் எண்ணங்களின் ஒட்டுமொத்தத பிரதிபலிப்பாய் அவள் இருந்தாள். சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் எனக்கு பிடிக்காது என்பதாலயே அவள் தாலி காட்டிக்கொள்ளவில்லை. சப்தங்கள், அழுகைகள் எனக்கு பிடிக்காது என்பதாலயே , குழந்தை பெற்றுக்கொள்ளவும் இல்லை . ஒருநாளும் எனக்கு இது வேண்டும் என அவள் என்னிடம் வாய் கூறி நான் கேட்டதில்லை. மாறாக, எனக்கு இது வேண்டும் என சொல்லும் முன்பே என் தேடலை என் கண் முன்னே வந்து நீட்டி விடுவாள். இத்தனை காலம் சமூகம் ஒருநாளும் எங்களை கண்டுகொண்டதில்லை அதனாலயே நாங்கள் சமூகத்தைப் பற்றி ஒருநாளும் கவலைப் பட்டதில்லை. இவளாளையே என் அறிவு ஜீவன் அடைந்திருக்கிறது...  இவளாளையே என் உலகம் விரிந்திருக்கின்றது. உலகில் நான் எங்கே சென்றாலும் என் இரவுகள் யாவும் இவளோடு தான் கழியும் என்பதை இவள் ஒருநாளும் அறிந்திருக்கவில்லை...  காரணம், இப்படிப்பட்டவள் ஒரு வேசி என்பதை நீங்கள் ஒருபோதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை....!




                                             
                                                - தமிழ்ஹாசன்