Wednesday 7 November 2012

அதிகாலை



                                                                           அதிகாலை 


இந்த அதிகாலை நம்மில்  ஒலித்து வைத்திருக்கும் விஷயங்கள் தான் 
எத்தனை ...எத்தனை.... பெரும்பாலும் நம்மில் பலர்க்கு அதிகாலை என்பது ஒரு தொலைதூர பயணம் முடிகின்ற பொழுதாகவே கழியும். சிலர்க்கு சுப காரியங்கள் நடக்கின்ற இடமாகவே  அமையும். ஆனால் எனக்கு...? அது ஒரு சோகத்தின் அடையாளமாகவே இன்றுவரையிலும் தெரிகிறது காரணம் இதுவரை நன் சந்தித்த அதிகாலை பொழுதுகள்  அப்படி...... 

என் வீடு

மீசை சரிவர முளைத்திடாத பருவம். கண் விழிக்கவே விருப்பம் இல்லாமல் அம்மாவின்  உந்துதலுக்கும் அப்பாவின் திட்டுதலுக்கும் பயந்தே எழுந்த காலம். பாதி கனவு, கலைந்த முடி, அரைகுறை பல்தேய்ப்பு, காலைகடன் முடிப்பதற்கு அப்பா குளிக்கும் வரை காத்திருக்கும் தவிப்பு, திட்டி கொண்டே அவர் வெளி வந்ததும் உள்ள சென்று சிறிது கண்ணுறங்கும் சுகம், அலாரம் அடித்ததை போன்று மீண்டும் ஒரு முறை திட்டு வாங்கிய பிறகே முழித்து, குளித்து, ஈரம் துடைக்காமல் உள்ளாடை அணித்து (அதனால் படும் அவஸ்தை பின்னாளில் தான்  தெரிந்தது...) சுட சுட தயாரான சாம்பார் சாதத்தினை தொடவும் முடியாமல் விடவும் முடியாமல் அரைகுறை சூட்டோடும் பசியோடும் உள்ளே தள்ளி அடுக்கி வைத்திருந்த  புத்தகங்கள் எடுத்து அவசரம் அவசரமாக பள்ளிக்கு கிளம்புவதிலே என் அன்றைய அதிகாலை பொழுது கழிந்தது.........!



என் தனிமை

மீசை வளர துவங்கிய காலம்.  கல்லூரி படிப்பிற்காக வெளியே சென்று தங்கி படித்த தருணம். பதினைந்து வருடங்களை வீட்டில் கழித்துவிட்டு புதியதோர்  இடம் தேடி அலைந்த நேரம். மேன்ஷேன் ரூம் முன்பின் தெரியாத நபருடன் அறையை பகிர்ந்து இரவில் கண்ணுறங்குவது இதுவே முதல் தடவை. அக்காலங்களில் நான் அலாரம் வைத்து விழித்ததை விட அலறி அடித்து எழுந்ததே அதிகம். அப்படி முழிக்கப்பட்ட தருணங்களில் நான் உணர்வது என் தனிமையை  மட்டுமே.. கண் விழிக்கும் முன்னே கையில் கொண்டு வந்து காபீயை கொடுக்கும் அம்மா இல்லை " இப்ப எந்திரிக்கிரியா.... என்னடா சொல்ற...? " என் அதட்டும் அப்பா இல்லை அரை முழுக்க அமைதியும் தனிமையுமே நிரம்பி இருந்தது.. வீட்டின் நியாபகம் வந்து  செல்போனை எடுத்து தலை மாட்டில் வைத்து வீட்டில் இருந்து யாரும் பேச மாட்டார்களா என ஏங்கி ஏங்கியே அன்றைய அதிகாலை பொழுதுகள் யாவும் கழிந்தன.   !


என் வெறுமை 

மீசையுடன் சேர்ந்து அங்கங்கே தாடையில் தாடியும் வளர்ந்த காலம். படிப்பு முடித்து தனித்து நிற்க வேண்டி ஒரு வேலையில் அமர்ந்த நேரம். காலை நேர வேலை 6 மணி தொடங்கி 2 மணியில் முடியும் அரைகுறை உத்தியோகம். இந்நேரங்களில் அலாராமே எனக்கு அபாயச்சங்கு போன்று ஆனது.   "கலாபக் காதலா.... கலாபக் காதலாஆஅ......." என ஒலிக்கும் அலாரம் ரிங்டோனை ஆப் செய்து சோம்பலுடன் எழுந்து எலும்பு உடைகிற வரை உடம்பை முறுக்கிவிட்டு திரும்பவும் படுதுகொள்ளும் ஒரு சுகமான தருணம்.  ............  பின்பு 5.45  க்கு எழுந்து சிலநேரம் குளித்தும்  பல நேரம் பல்துலக்கியும் கண்முன்னே தெரியும் எதோ ஒரு சட்டையை உடுத்தி தூசி படிந்து ஷூ வுக்குள் ஒளிந்திருக்கும் அழுக்கு சாக்ஷினை எடுத்து உதறிவிட்டு அதனால் வருகின்ற தும்மலையும் அடக்கி விட்டு " இன்னைக்காவது  இத தொவச்சு தொலைக்கணும் " என்ற தினசரி புலம்பலோடு வேலைக்கு செல்லும் காலம். அங்கே சென்றபின் அந்நேரம் வேலை எதுவும் இல்லாத காரணத்தினால் என் கவனத்தை இசைபக்கம் திருப்பி விட்டேன். அந்நேரம் எப்போதும் என் காதில் எதோ ஒரு பாடல் கேட்டுகொண்டே இருக்கும். காலை நேரம், காதில் இசை இசையின் இடையே காபி என சுகமாயும் அதே பின்னொரு நாள் அதிகாலை பொழுதில் என் காதலி " இனியும் நாம் பழக வேண்டாம் பிரிந்து விடலாம் " என சொல்லி எனக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தி ரணமாயும்  இரண்டற கலந்து என்னை தனிமையின் உச்சத்திற்கே கொண்டு சென்றன அன்றைய அதிகாலை பொழுதுகள் யாவும். ...! 


என் கொடுமை 

முகம் முழுவதும் தாடி முழுவதுமாய் வளர்ந்த காலம். அல்ட்ரா சிட்டி சென்னையை தேடி உத்தியோகம். என் தேடலை போன்றே என் வாழ்க்கை பயணமும் முடிவில்லா தூரத்தை கொண்டது. மூன்று மாத போராட்டம் அப்போதைய நாட்களில் அதிகாலை நேரம் என்பது எனக்கு ஏதாவது நேர்முகத் தேர்விற்கு கிளம்புவதாக மட்டுமே இருக்கும். சென்ற இடமெலாம் மல்டிப்ளெக்ஸ் கார்பரேட் நிறுவனங்கள் வேலை கிடைத்ததும் அதே போல் ஒரு நிறுவனத்தினில் தான். இங்கே எனக்கு இரவு நேர பணி. " இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் " என்ற பாடல் தான் அடிக்கடி என் நினைவிற்கு வரும். அதிகாலை 5  மணிக்கு வேலை முடித்து பேருந்திற்காக அரை மணி நேரம் காத்திருந்து உடல் ஒடுங்கி கண்கள் சுருங்கி பேருந்து வந்ததும்  ஏறி ஜன்னலோரம் அமர்ந்து அடிக்கின்ற காற்றில் அடைகின்ற போதை ஆயுளுக்கும் மறக்காத கொடுமை.  நான் இறங்கவேண்டிய இடம் வந்ததும் இறங்கி தள்ளாடியபடி நடந்து வருகையில் எதிரே எனக்கு எதிர்மாறான மனிதர்கள். பளிச்சென சிரித்த முகம், எடுத்த வகிடு மாறாமல் இருக்கும் தலை சீவல், பான்ட்ஸ் பவுடரும் மல்லிகை பூ வாசமும் இன்றளவும் என்னை மதிமயங்க செய்து விட்டு போகிறது. அதிலும் என்னை கடந்து செல்லும் கன்னிப்  பெண்களின் தேக வாசனையை நுகர்வதற்காகவென்றே என் நாசிகள் படைக்கப்பட்டதாக நான் ஒவ்வொரு முறையும்  எண்ணி வருகிறேன். தேநீர் அருந்த நிற்கையில் வருகிற எண்ணெய் பலகார வாசனை, ஊதுகிற சிகரெட் புகை வாசனை, மிதமாய் ஒலித்து கொண்டு செல்லும் பேருந்து ஹாரன் சப்தம் இவைகளை கேட்டும், பார்த்தும், ரசித்துமே கடந்து சென்றன என் அன்றைய அதிகாலை நேரங்கள்....!  

என் இனிமை 

வாழ்க்கை ஓர் வட்டம் என உணர்ந்து கொண்ட பருவம். காலம் மாறியதால் என் வாழ்க்கை பாதைகளும் மாறின. வாழ்க்கையே போராட்டமாய் போய்க்கொண்டிருந்த காலத்தில் ஒரு போராட்ட வாழ்வினை வாழ்க்கையாய் விரும்பி எடுத்து கொண்ட காலம். மீண்டும் கல்லூரி மாணவனானேன்... 8 மணிக்கு விழிப்பு சில நேரங்களில் 8.30 என சூரியனையும் அதன் அழகையும் கண்டிராத காலம் ஆனாலும் சில நாட்களில் வரும் அதிகாலை விழிப்பு என் ஆண்மை தன்மையை பரிசோதிப்பதற்கு மட்டுமாகவே அமையும். அதையும் மீறி நான் அதிகாலையை ரசிக்க எண்ணி எழ நேருமேயானால்,  அது மற்றவர்களுக்கு நான் தரும் மிகப்பெரிய துன்பமாகவே( இதை படிபவர்களுக்கு மட்டும் ) கருதி வருகிறேன்.................   



இன்னும் இது போன்று இனிமையான விடியல்களைத் தேடியே என் மனது அலைகிறது...... இதோ நாளை வரபோகும் விடியலுக்காக இப்போதே என் விழிகளை திறந்து புது வழிகளை காண்கின்றேன் மற்றொரு அதிகாலையை நோக்கிய பயணத்தில் ....!



                                                                                                  - தமிழ்ஹாசன் 







--
SURVIVAL OF THE FITTEST