Friday 2 August 2013

ஒரு துளி மழை

அதிகாலை
அமைதியான நேரம்
அவனின் அரவணைப்பில் அவள்

அலாரம்
அபாயச்சங்காய் அலறியது
சிதறிய ஆடைகளைச்
சேர்த்தெடுத்தாள்
விடியலை அன்றுதான்
விசாலப் பார்வையாய் பார்த்தாள்.

கணவன் கண்விழிக்கும் நேரம்
கதிரவன் காலைவணக்கம் சொன்னான்
மனைவியை மஹாலக்ஷ்மியாய்
அன்றுதான் பார்த்தான்
இருவருக்கும் புன்னகை
மட்டுமே பொது மொழியானது

நாட்களை எண்ணிக்கொண்டே
இருந்தான் நாணத்துடன்
அந்த நாளை குறிப்பிட்டு
அவளிடம் கேட்டான்
இருபுறமும் தலையசைத்தாள்
இல்லை என்றவாறு.

சில நாட்களாய்  அவனும்
இதே கேள்வி
அவளும் இதே பதில்..

உண்மை ஊர்ஜிதமாகும்
எண்ணத்தில் அவர்கள்
அவளிடம் அம்மா
' ஜாக்கிரதையாக இரு "
  என்றாள்.

அப்பா,
"உடம்பை பாத்துக்கோ "
என்றார்.

கணவன்,
"எந்த வேலையும் செய்யாதே "
என்றான்.

அத்தை,
"முடிவாக மூன்றாம்நாள் பாப்போம் "
என்றாள்.

இறுதியில் உறுதியாக்கும் முயற்சியில்
' மருத்துவமனை  செல்வோம் '
என்றான் கணவன்.
மூவாயிரம் மூட்டைகளில்
மகிழ்ச்சியை மொத்தமாய்
கட்டியதுபோல் மனதினில்
வைத்துகொண்டாள்.
குளித்துவிட்டு வருகிறேன்
என்றவள் வந்தவுடன்
அழத்தொடங்கினாள்
என்னாயிற்று
என்றான் கணவன்
தேம்பித் தேம்பி
அழுதவாறே சொன்னாள்
" தேகத்தில் இருந்து
மழை வந்துவிட்டதென்று..! "


                                                        -தமிழ்ஹாசன்

2 comments: