Friday 2 August 2013

கனாக்கண்டேன் தோழி


மொட்டைமாடி நள்ளிரவில்
யாருமில்லா வேளையில்
முற்றத்து நிலாவுடன்
நீயும் நானும் மட்டும்.

கும்மிருட்டில்
குட்டைப் பாவாடையும்
சட்டைப் பையனுமாய் நீ..!

நடு இரவில்
நித்திரை கலைந்து
நிராயுதபாணியாய்
நிற்கும் நான்.

இரவில் கூட
பகலாய் இருக்கிறாய்
கொஞ்சம் நிலவுக்கு
உன் அழகை
இரவல் கொடு
பகலிலும் வந்து போகட்டும்..!

இரவு முடியும் வேளையில்
விடியலைப் பற்றி
விவாதித்துக் கொண்டோம்

நிலவு மறையும் நேரம்
நித்திரைக் கனவை
பகிர்ந்து கொண்டோம்

மன அமைதி என்றுரைத்து
மக்கள் அமைதி
வேண்டிக் கொண்டோம்

விடியலைத் தேடும்
பாதையில் நம்
காலடித்தடங்கள்.

என் கரம்பிடித்து
நடைபயிலும் ஓர்
கைக்குழந்தையாய் நீ..!

விரல் பிடித்த நேரம்
விண்ணில் நடப்பது போன்ற
உணர்வு என்னுள்.
உண்மைதான்
நீ என் வசமிருந்தால்
வானம் கூட நான்
தொட்டு விடும் தூரம்தான்...

நடந்து நடந்து
மூலையில் முடங்கிக் கொண்டாய்
முடியாதென்று கூறி
மூச்சிரைத்தாய்.
மீண்டும் நடக்கத்
தயாரானோம்
என் இரு கால்களில்..!

ஒற்றை நிழல்
நிழலில் நான்
என்னில் நீ...
பூவும் பெண்ணும்
ஒன்றென்பதை
உணர்ந்தேன்
பெண் ஒருபோதும்
பாரமில்லையென்பதை
உன்னால் அறிந்தேன்

என் இரு கரங்களில்
காகிதப் பூவாய் நீ...!
இரவைக் கடந்தும்
நடந்து கொண்டிருந்தோம்
எங்கோ விடியப் போகிற
விடியலைத் தேடி.
விடியலும் வந்தது
என் இதயத்தின்
இடப்பக்கத்தில்
இனம் புரியாத
வலியும் வந்தது.

நினைவில் நீ
நின்றதைக் கண்டு
மஞ்சம் செழித்தது
நிஜத்தில் நீ
இல்லையென்று
நெஞ்சம் வலித்தது.
எங்கோ இருக்கிறாய்
என்றும் மாறாத
அதே அன்புடன்
இன்றும் என்னுள்
அன்று பார்த்த அதே
அன்புத் தோழியாய்..!



                                            -தமிழ்ஹாசன்

No comments:

Post a Comment