Monday 18 February 2013

வாசனை


                               
               ஒவ்வொரு நாளும் காலை துயில் எழுவதில் இருந்து இரவு துயில் கொள்ளும் வரை வித விதமான வாசனைகளை நுகர்ந்து கொண்டிருக்கின்றேன். எதை தேடுகிறது என் நாசி..? எங்கிருந்து வருகிறது வாசம்..? அம்மாவின் வியர்வை வாசம், அப்பாவின் மருந்து வாசம் மட்டும் பழக்கப்பட்டு போன எனக்கு எல்லா வாசனைகளும் புதியதாகவே இருந்தன. தினந்தோறும் சாலையோரம் செல்கையில் வாகனப் புகை தந்துவிட்டு போகிற ஒரு வாசம்.. வார நாளிதழ்கள், தினசரி நாளிதழ்கள், புத்தகங்கள் என எது வாங்கினும் நான் படிக்கும் முதல் செய்தி அதன் வாசனையை மட்டுமே. எங்கிருந்தோ அந்த புத்தம் புது தாள்களில் வருகிற வாசனை என்னை வேறொரு உலகிற்கு கொண்டு செல்வதாய் நான் உணர்கிறேன். என் படிக்கும் ஆர்வத்தினை விட அது தரும் வாசனையே என்னை ஒவ்வொரு நாளும் படிக்க தூண்டுகிறது. இரவு நேர உணவு வாங்கி வரும் வேளையில் ஒரு முட்டுச் சந்தினைப் போல் உள்ள தெருவினில் நடந்து வரும் போது அந்த வீடுகள் தருகிற ஈர வாசனை... என்னை காலத்தின் முன்னோக்கி செல்ல வைக்கிறது. என் குழந்தைப் பருவத்தை வளர்த்த எங்கள் குடும்ப நண்பர்களாக இருந்த ' ஆசசி வீடு ' தருகிற வாசனை அது. எந்நேரமும் வீட்டினுள் ஓர் ஈர வாசனையை நுகர்ந்து கொண்டே இருக்க முடியும். அந்த மரத்தாலான மாடி படிக்கட்டுகளில் அதன் ஓரங்களில் ஈரமும் சேர்ந்து தருகிற வாசனை ஆயுசுக்கும் நாசியை விட்டு அகலாது. போதாதென்று அந்த வீட்டின் அக்காக்கள் தருகிற வாசனை புதிது. தீப்பெட்டி தொழிற்சாலையின் தீப்பெட்டிகளில் ஒட்டுகிற கோந்தும் அதனுடன் எந்த சாயமும் முகத்தில் பூசிக்கொள்ளாத தேகத்தின் இயற்கை வாசமும்  கலந்து தருகிற ஒரு பரிசுத்தமான  வாசனை அது. இது தான் பெண் வாசனை என அப்போது நினைத்திருந்தேன். அது ஏழ்மையின் வாசனை என்பதை நான் அப்போது உணரவில்லை. காலங்கள் மாற பாதைகள் மாற ஒவ்வொரு வாசனையும் எனக்கு புதியதாகவே இருந்து வந்தது. மல்லிகைப் பூ பெண்களுக்கென்றே ஒரு வாசம், மாதா கோயில் பெண்களுக்கென்றே ஒரு வாசம், கடைக்கார பெண்மணிகளுக்கென்று ஒரு வாசம், கம்ப்யூட்டர் பெண்மணிகளுக்கென்று ஒரு வாசம் என்பதை நான் உணர்ந்து வந்தேன். ஒவ்வொரு பெண்ணும் தரும் சுகத்தினை விட அவள் தரும் வாசனை சுகம் சுகமானது என்றே நான் எண்ணுகிறேன். இது போதாதென்று சுய இன்ப வேளைகளில் என் ஆண்மை சிந்தும் விந்துவின் வாசம் புது புது அர்த்தங்களை என்னுள் தருகிறது. ஐன்ஸ்டீன் க்கு அழுகிய ஆப்பிள் வாசம் தான் புத்துணர்ச்சியை தருமாம். ஹிட்லர் க்கு இரத்த வாசம். அது போலவே எனக்கும் பல பல வாசனைகள் புத்துணர்ச்சியை தருகிறது. சிகரெட் புகை தருகிற வாசனை, மது அருந்தும் பொழுது பிளாஸ்டிக் தம்ளரின் வாசனையும் மதுவும் சேர்ந்து தருகிற வாசனை, சிநேகிதியின் எச்சில் முத்த வாசனை எல்லாமும் சேர்ந்து எனக்குள் ஒரு வித மயக்கத்தை தருகிறது. மயக்கத்தின் முடிவிலே என் படைப்பு பிறக்கிறது. எப்போது என்னுள் மரண வாடை அடிக்கிறதோ அப்போது  நான் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம் அதுவரை என்னைச் சுற்றிய எல்லா நிகழ்வுகளிலும் என் வாசனை வாழ்ந்து கொண்டே இருக்கும்.  !            



        

                                                                                                         -  தமிழ்ஹாசன்                                                              

2 comments: